அதிக நேரம் ஃபேஸ்புக்கில் செலவழிப்பவர்கள் மன அழுத்தத்தில் மூழ்கும் அபாயம்!
நீங்கள் எவ்வித நோக்கமும் இல்லாமல் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுகிறீர்களா? உங்களது விழிகள் திரையை விட்டு நீங்காமல் இருக்கின்றதா?
இவ்விரண்டு கேள்விகளுக்குமான பதில் 'ஆம்' எனில், மன அழுத்தத்தை உள்ளாகும் அபாயத்துக்கான அறிகுறிகள் உங்களிடம் இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.
அதிக நேரம் ஃபேஸ்புக்கில் செலவழிப்பவர்கள் பலர் மன அழுத்தத்தில் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
மேலும், ஃபேஸ்புக் தளத்துக்கு அடிமையாவோர், தனிமை உணர்வால் வாடும் நிலைக்குத் தள்ளப்படும் சூழலுக்கு ஆளாவார்கள் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
என்னதான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் நம் அனைவரையும் இணைக்கும் வண்ணம் காட்சியளித்தாலும், அதிக நேரம் இவற்றை பயன்படுத்துவது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.
"ஒருவர் மனதில் தங்கும் சோகத்துக்கும், ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் உளவியல் ரீதியான தொடர்பு இருக்கிறது" என்கின்றனர் ஆஸ்டிரியன் உளவியலாளர்களான கிறிஸ்டீனா சஜொய்கலோவும் டோபியாஸ் கிரிட்மேயரும்.
மூன்று கட்டமாக நடந்த இந்த ஆய்வில், முதல் கட்டமாக 123 ஜெர்மன் பேசும் ஃபேஸ்புக் வாசகர்களைக் கொண்டு ஆராய்ந்தனர். பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கில் சிறிது நேரம் செலவிட்டவுடன் அவர்களின் மனநிலையில் மாற்றம் காணப்பட்டது. 'அமேசான் மெகேனிகல் டர்க்' என்ற திட்டத்தின் மூலம் இதன் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியில் 263 பேர் பங்கேற்றனர். அதில் பங்கு பெற்றவர்களின் மனநிலையிலும் மாற்றம் காணப்பட்டது.
இந்த ஆராய்ச்சியின் கடைசி கட்டமாக 101 ஃபேஸ்புக் வாசகர்களிடம் "ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்ப்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமா அல்லது சோகத்தை உண்டாக்குமா?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கட்டத்திலும், ஃபேஸ்புக்கிலிருந்து வெளிவரும்போது தங்கள் வாழ்க்கையில் தனிமை ஏற்படுகிறது என்று பதிலளித்தார்கள் என வைரல் க்ளோபல் நியூஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஆராய்ச்சி தகவல்கள் 'கம்பியூடர்ஸ் இன் ஹுயூமன் பிஹேவியர்'என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, கூச்ச சுபாவம் உள்ளவர்கள், பிறரிடம் அதிகம் பேசாத உள்முக சிந்தனையாளர்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதால் தம் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்வது சிறிதே என்றும் அலபாமா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
0 comments:
Post a Comment
THANKS FOR VISIT
Note: Only a member of this blog may post a comment.