தமிழர் கோவிலில் இருந்து சிங்கள மாணவரை வெளியேற்றிய தமிழ் உணர்வாளர்கள் !
தஞ்சையில் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மாணவர்: தனியார் விமானம் மூலம் சென்னை "ரிட்டன்'
: தஞ்சையில், தமிழ் ஈழ ஆதரவாளர்களால், தாக்குதலுக்கு உள்ளான சிங்களர் உட்பட, 17 மாணவர்கள், தனியார் விமானம் மூலம், சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் வந்த வேன் மீது தாக்குதல் நடத்திய, ஐந்து பேரை பிடித்து, திருச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
டில்லியில் உள்ள ஒரு பல்கலையில், தொல்லியல் துறையில் படித்து வரும், 17 மாணவர்கள், புராதன சின்னங்கள் பற்றி ஆய்வு செய்ய, சென்னையில் இருந்து, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் மூலம், நேற்று காலை, திருச்சி வந்தனர். பின், வேனில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றனர். அவர்களில், புத்த மதத்தை சேர்ந்த, கனலேகா என்ற சிங்களர், காவி உடை அணிந்து, மொட்டை அடித்திருந்தார். சிங்களர் ஒருவர், தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருக்கும் தகவல் அறிந்து, அங்கு சென்ற தமிழ் ஈழ ஆதரவாளர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தினர்; சக மாணவர்கள், கனலேகாவை மீட்டனர். போலீசார் உதவியுடன், வேன் மூலம் அவர்கள், திருச்சி அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று மதியம், 2:20 மணிக்கு, திருச்சி விமான நிலையம் வந்த வேன் மீது, அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே நின்றிருந்த சிலர், கல், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில், வேன் கண்ணாடி உடைந்தது. வேனில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். போலீஸ் பாதுகாப்புடன், திருச்சி விமான நிலையத்துக்குள், கனலேகாவின் உடைகளை மாற்றி, அங்கிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், மதியம், 3:30 மணிக்கு, 17 மாணவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, ஐந்து பேரை பிடித்து, திருச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.