Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Thursday, September 25, 2014

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்ட பாதையை அடைந்தது: இந்தியா வரலாற்று சாதனை!

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்ட பாதையை அடைந்தது: இந்தியா வரலாற்று சாதனை!


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் 300 நாட்களுக்கும் அதிகமாக விண்ணில் பயணம் செய்து திட்டமிட்டப்படி இன்று காலை செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

அப்போது அதில் உள்ள லாம் என்ஜின் மற்றும் அதனுடன் பொருத்தப்பட்டுள்ள 8 சிறிய என்ஜின்கள் 24 நிமிடங்கள் எரியூட்டப்பட்டு அதன் வேகத்தை குறைத்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த அரிய நிகழ்வை பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார்.

இந்த திட்டத்தின் வெற்றி மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.


சரியாக காலை 7.59 மணிக்கு மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தினார்.


உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த இந்த அரிய நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பார்வையிடுட்டார்.


பிரதமர் மோடி பெருமிதம்:


மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதைப் பாராட்டிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "புதிய வரலாறு படைத்துவிட்டோம்" என்றார். தொடர்ந்து பெருமிதம் பொங்க பேசிய அவர்: "நமக்கு தெரியாத ஒன்றை சாத்தியப்படுத்தியிருக்கிறோம். அடைய முடியாததை அடைந்திருக்கிறோம்.


மங்கள்யான் விண்கலத்தை, 65 கோடி கிலோமீட்டர் தூரத்தை வெற்றிகரமாக கடக்கச் செய்து, மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டதை செய்து காட்டியிருக்கிறோம். கற்பனைக்கு அப்பாற்பட்ட இலக்கை அடைந்துள்ளோம். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதைக்குள் விண்கலத்தை செலுத்திய பெருமையை இந்தியாவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பெற்றுத் தந்திருக்கின்றனர். அதுவும், மிகக் குறைந்த செலவில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதிக் கட்டுப்பாட்டுகளை நெருக்கடியாக கருதாமல் விஞ்ஞானிகள் இந்த சாதனையை புரிந்துள்ளனர்.


செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் இதுவரை 21 மட்டுமே வெற்றியடைந்துள்ளது. ஆனால், நாம் தடைகளைக் கடந்து வெற்றி கண்டுள்ளோம்" என இஸ்ரோ விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டினார்.


மங்கள்யான் கடந்து வந்த பாதை:


கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி25 ராக்கெட் மூலம் பிற்பகல் 2.38 மணிக்கு மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த மங்கள்யான், நியூட்டன் 440 திரவ நிலை இயந்திரம் இயக்கப்பட்டதன் மூலம் 23,550 கி.மீட்டருக்கு மேலே உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு இயந்திரங்கள் படிப்படியாக இயக்கப்பட்டதால் சுற்றுவட்டபாதையில் மங்கள்யான் மெல்ல மெல்ல மேல் எழுந்தது.


இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி புவி ஈர்ப்பு விசையில் இருந்து விலகி 66.6 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் தனது பயணத்தை தொடங்கியது. சந்திரனின் சுற்று வட்டப்பாதை உள்ளிட்ட முக்கிய பாதைகள் அடுத்தடுத்த நாட்களில் வெற்றிகரமாக மாற்றப்பட்டன. மங்கள் யானின் ஒவ்வொரு அசைவுக்கும் தேவை யான ஆணைகளை இஸ்ரோ விஞ் ஞானிகள் பெங்களூரில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அவ்வப்போது கொடுத்துக்கொண்டே இருந்தனர்.


மங்கள்யான் விண்கலம் கடந்த ஜூன் 12-ம் தேதி 2-வது வழித்தடத்துக்கு மாற்றப்பட்டது. 300 நாட்களை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் கடந்த 16-ம் தேதி ம‌ங்கள்யானில் மேற்கொள்ள வேண்டிய தகவல் பரிமாற்ற ஆணைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து 3-வது வழித்தடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.


செவ்வாய் கிரகத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் மங்கள் யானில் கடந்த 10 மாதங்களாக செயல்படாமல் இருந்த இயந்திரங்களை இயக்கி சோதிக்க இஸ்ரோ விஞ்ஞானி கள் திட்டமிட்டனர். அதன்படி கடந்த திங்கள்கிழமை மங்கள்யான் விண் கலத்தில் உள்ள‌ முக்கிய திரவநிலை நியூட்டன் 440 இயந்திரத்தை சுமார் 4 வினாடிகள் இயக்கினர்.


இதற்கு 0.567 கிலோ எரிபொருள் செலவானது. இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக அமைந்தது. இதனையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டது போல், மங்கள்யான் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவொருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


இந்தியா புதிய சாதனை:


மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதால் இந்த சாதனையைச் செய்த நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இதனை சாதனையை படைத்துள்ளன. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதைக்குள் விண்கலத்தை செலுத்திய பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.


இதுவரை செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட 51 விண்கலங்களில் 21 மட்டுமே வெற்றியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

THANKS FOR VISIT

Note: Only a member of this blog may post a comment.

DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More