‘ஏ’ சான்றிதழ் திரைப்படங்கள் இனி 11 மணிக்கு மேல் தான் டிவியில் ஒளிபரப்பாகும்?!
இரவு 11:00 மணிக்கு மேல் டிவியில், ஏ படங்கள்!
புதுடில்லி : "ஏ' என்ற, தணிக்கை சான்றளிக்கப்பட்ட, சினிமா படங்களை, நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல், "டிவி'யில் ஒளிபரப்ப, மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கேபிள், "டிவி' சட்டப்படி, "ஏ' சான்று அளிக்கப்பட்ட, சினிமா படங்களை, "டிவி'யில் திரையிட முடியாது. அந்த படங்களை, "டிவி'யில் ஒளிபரப்ப வேண்டுமென்றால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், "யுஏ' சான்று அளிக்க வேண்டும்."யுஏ' சான்று வேண்டுமென்றால், "ஏ' படங்களில் உள்ள, ஆபாச காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தயாரிக்கப்படும் படங்கள், "டிவி'யில் ஒளிபரப்பப்பட்டால் தான், தயாரிப்பாளருக்கு போதிய லாபம் கிடைக்கும் என்பதால், ஏராளமான படங்கள், "யுஏ' தர சான்றுக்காக, மத்திய தணிக்கை வாரியத்தில் காத்திருக்கின்றன.
அவற்றில் எந்தெந்த படங்களை, "டிவி'யில் திரையிடலாம் என்பது குறித்து முடிவெடுக்க, மத்திய தணிக்கை வாரியத்துடன் இணைந்து, பி.சி.சி.ஐ., எனப்படும், செய்திகள் இல்லாத பிற, "டிவி' நிகழ்ச்சிகளின் கட்டுப்பாட்டு அமைப்பு முயற்சித்து வருகிறது.
"ஏ' சான்று அளிக்கப்பட்ட படங்களை, "யுஏ' சான்றுக்கு மாற்ற, படத்தின் முக்கிய காட்சிகளை வெட்ட வேண்டியிருப்பதால், படத்தின் கதை சரிவர புரியாமல், பார்வையாளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதால், "ஏ' சான்று படங்களை, நள்ளிரவு, 11:00 மணிக்கு மேல், "டிவி'களில் வெளியிட அனுமதிக்கலாம் என, தணிக்கை வாரியத்திற்கும், பி.சி.சி.ஐ.,க்கும், பட தயாரிப்பாளர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.மேலும், படத்தின் ஒவ்வொரு அங்குலமும், மிக கவனமாக தயாரிக்கப்படுவதால், படத்தில், ஆங்காங்கே காட்சிகளை வெட்டுவதும் சிரமமான பணி; அதனால், படத்தில் உயிரோட்டம் இல்லாமல் போய் விடுகிறது என்ற கோரிக்கையும், முன் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, "ஏ' படங்களை, நள்ளிரவில், "டிவி'யில் காட்டலாம் என்ற கொள்கை அளவிலான முடிவிற்கு வந்துள்ள, பி.சி.சி.ஐ., எந்தெந்த படங்களை திரையிடலாம் என்பதை முடிவு செய்வதற்காக, சமூக ஆர்வலர்கள், திரைப்பட துறையினர் மற்றும் தகவல், ஒலிபரப்பு துறை அதிகாரிகளை கொண்ட குழுவை ஏற்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, விரைவில், நள்ளிரவு, 11:00 மணிக்கு, "ஏ' படங்கள், "டிவி'களில் ஒளிபரப்ப வாய்ப்பு உள்ளதாக, மத்திய தணிக்கை துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
THANKS FOR VISIT
Note: Only a member of this blog may post a comment.